×

கடந்த 3 ஆண்டுகளில் 6,115 புத்தாக்க தொழில்கள் புதியதாக தொடக்கம்: தமிழ்நாடு அரசு சாதனை

சென்னை: தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் கடந்த 3 ஆண்டுகளில் 6,115 புத்தாக்க தொழில்கள் புதிதாக தொடங்கப்பட்டு தமிழ்நாடு அரசு சாதனை படைத்துள்ளது. இந்தாண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் “கடந்த மூன்றாண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட சிறப்பு முயற்சிகளின் விளைவாக புத்தொழில் நிறுவனங்கள் (startups) அமைவதற்கான உகந்த சூழலை உருவாக்குவதில் நாட்டிலேயே தலைசிறந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பது பெருமகிழ்ச்சிக்குரியது.

அந்த வெற்றியை தக்க வைக்கும் நோக்கோடு உலகில் பல்வேறு பகுதிகளில் முத்திரை பதித்த முன்னணி புத்தொழில் நிறுவனங்களும், இளம் தொழில்முனைவோரும் கலந்து கொள்ளும் வகையில் உலகப் புத்தொழில் மாநாடு (Global Startup Summit) வரும் 2025 ஜனவரி மாதம் சென்னையில் நடத்தப்படும்” என அறிவிக்கப்பட்டது. அதன்படி, புத்தொழில் வளர்ச்சியில் அரசு செலுத்தி வரும் ஆர்வமும் அக்கறையும் எளிதில் விளங்குகிறது.

குறிப்பாக, கடந்த 2021ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றபோது தமிழ்நாட்டிலிருந்த புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 2105 மட்டுமே. மூன்றாண்டுகளாக இந்த அரசு புத்தொழில் நிறுவனங்களுக்கு அளித்து வரும் மிகப்பெரிய ஊக்கம் காரணமாகவே 2021க்கு பிறகு 6,115 புத்தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளைப் பெருக்கிட வேண்டும் என்ற முதல்வரின் நோக்கத்தின் அடிப்படையிலும், தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்திட வேண்டும் என்னும் குறிக்கோளின் அடிப்படையிலும் தமிழ்நாட்டில் ஏற்படுத்தி வரும் தொழில் வளர்ச்சியின் சாதனை குறியீடாகவே திகழ்கிறது.

அதேபோல், தமிழ்நாடு அரசின் சார்பில் புத்தாக்கத் தொழில் வளர்ச்சிக்காக கோவையில் ஆகஸ்ட் 2023ல் நடந்தப்பட்ட ‘‘தமிழ்நாடு புத்தொழில் திருவிழா-2023’’ மாபெரும் வெற்றி கண்டது. இதில், 21,556 பேர் பங்கேற்றனர். 18,835 பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். 1,761 பிரதிநிதிகளும், 841 கண்காட்சி அமைப்பாளர்களும் இடம் பெற்றனர். 83 உற்பத்திப் பொருள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. 67 புத்தொழில் நிறுவனங்கள் மூலம் 6,251 பொருள்கள் தயாரிக்கும் திட்டங்கள் முன்மொழியப்பட்டன. அவைகளில், ரூ.3 கோடியே 64 லட்சத்து 39 ஆயிரம் மதிப்பீட்டில் 1,674 தொழில்களை தொடங்கிட தொழில் முகவர்கள் முன்வந்தனர்.

* 18 மகளிர் சுய உதவிக் குழுக்கள் புத்தாக்கத் தொழில் கூடங்களாக மாறியுள்ளன. 25 மகளிர் தொழில் முகவர்கள் புத்தாக்கத் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.

* தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்கள் மேம்பாட்டுத் துறை நிதியுதவியால் தொடங்கப்பட்ட புத்தாக்கத் தொழில்கள் மூலம் 150 வேலைவாய்ப்புகளும், டான்சீட் நிதியுதவியில் தொடங்கப்பட்ட புத்தாக்கத் தொழில்கள் மூலம் 1,525 வேலைவாய்ப்புகளும் வேறு பல புத்தாக்க தொழில்கள் மூலம் 238 வேலைவாய்ப்புகளும் என மொத்தம் 1,913 புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

* டான்சீட் நிதியுதவியில் தொடங்கப்பட்ட புத்தாக்கத் தொழில்களில் ரூ.314.30 கோடி முதலீடுகள் உயர்ந்துள்ளன. குறிப்பாக, தமிழ்நாடு நிதி தளம் வாயிலாக 714 முதலீட்டாளர்களுடன் இணைந்துள்ள புத்தாக்கத் தொழில்களின் நிதி ரூ.26 கோடியே 40 லட்சம் என உயர்ந்துள்ளது. மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சியால் புத்தாக்க தொழில்களுக்கு நிதியுதவி அளித்திட ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, எச்.டி.எப்.சி, டி.பி.எஸ் வங்கி, பெடரல் வங்கி, எஸ்.வங்கி, யூகோ வங்கி ஆகிய வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன.

* புத்தாக்கத் தொழில் நிறுவனங்கள் வளர்ச்சிக்குத் தேவையான உதவிகள் அளித்திட 5,393 பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

* திருப்பெரும்புதூர், ஓசூர் சிப்காட் தொழிற் பூங்காக்களில் புத்தாக்க மையங்கள் 33.46 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிப்காட் நிறுவனம் நிறுவப்பட்டு, புத்தாக்கத் தொழில் வளர்ச்சிக்கு இந்த அரசு பெரிதும் ஊக்கம் அளித்துள்ளது.

* புத்தாக்கத் தொழில் வளர்ச்சிக்கான 5 ஊக்க மையங்களுக்கு சிங்கப்பூரிலுள்ள ஸ்விட்ச் தொழில் நிறுவனத்திற்குச் சென்று அதன் செயல்பாடுகளை அறிந்து பயன்பெறும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. 15 புத்தாக்கத் தொழில் ஊக்க மையங்களின் வளர்ச்சிக்காக அவை ஒவ்வொன்றுக்கும் 5 லட்சம் ரூபாய் மானிய உதவி வழங்கப்பட்டுள்ளது.மேலும், தமிழ்நாடு தொழில் ஊக்க வளர்ச்சி மையங்களின் முதிர்வு மாதிரி தயாரிப்பதில் 55 ஊக்க மையங்கள் பயன்பட்டன.

இதுமட்டுமல்லாது, புத்தாக்கத் தொழில்களுக்கான போர்ட்டல் கடந்த பிப்.29ம் தேதி ஏற்படுத்தப்பட்டது. அது முதல், 78 புத்தாக்கத் தொழில்கள் இதில் இணைந்துள்ளன. அதன்படி, பல்வேறு முயற்சிகளை முனைப்புடன் மேற்கொண்டு வருவதன் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு புத்தாக்கத் தொழில்கள் வளர்ச்சியில் மாபெரும் சாதனைகள் படைத்து வருவதாக பலர் பாராட்டு தெரிவிக்கின்றனர்.

The post கடந்த 3 ஆண்டுகளில் 6,115 புத்தாக்க தொழில்கள் புதியதாக தொடக்கம்: தமிழ்நாடு அரசு சாதனை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Govt ,Chennai ,Tamil Nadu government ,M.K.Stalin ,Chief Minister of ,Tamil ,Nadu ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...